இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Wednesday 23 May 2012

ஆனந்தக் காதலில் ... மூழ்கித் திளைக்கிறேன்.



நமக்கான  காதல்
தோற்றுவாய் ...
கரும்புத்  தோட்டம் ...
கால்வாய்.....
கோவில் ... குளம் ...
என ஊர்புற  காதலாகவும்

கடற்கரை ... பேருந்து...
வெளிச்சம்  குறைந்த
பட்டணத்துப் பொலிகாளைகள்
நாய்போலகூடித்  தழுவும்
நட்சத்திர  விடுதிகளுமில்லை.

காபிஷாப்  ஷாப்பிங் மால்
மல்டி பிளக்ஸ்  இணையம்
மூஞ்சிப்  புத்தகம்
என திரிந்து கிடக்கவுமில்லை.

கட்டான உடலைக்
கண்டு காதலிக்கவுமில்லை

வட்டநிலா போன்ற
மூஞ்சியைக்  கண்டு
காமுறவுமில்லை.

பகட்டான  வாழ்க்கைக்கு
பணத்திற்கு...
நாம் காதலிக்கவில்லை.

தெளிவான  பார்வை
தேர்ந்த  அறிவு ...
உனக்குமிருந்தத்து ...
எனக்குமிருந்தத்து .

தமிழரின்
உயரிய நூல்
தொல்காப்பியம் போல
காதலுக்கான  இலக்கணங்களை
முரண்படா விதிகளுடன்
கட்டமைத்தாய்.

அந்தக்  காதலில்
இழுக்கப்  பட்டேன்
அந்த  ஆனந்தக்
காதலில் ...
மூழ்கித்  திளைக்கிறேன்.

   

Monday 14 May 2012

நாங்கள் தமிழர்கள்



நாங்கள்  சந்தனத்திற்கும் 
சாக்கடைக்குமான 
வேறுபாட்டை  அறியாதவர்கள் .

போலிகளுக்கு  புகழ் 
மாலை சூட்டி 
மகிழுகிறவர்கள்.

நேர்மையை  புதைத்துவிட்டு 
அவலங்களை 
அரங்கேற்றம்  செய்கிறவர்கள்.

புதையலை  ஒதுக்கிவிட்டு 
பொய்களை  தேடிக்கொண்டு 
இருப்பவர்கள் .

தத்துவங்களைத்  தவறவிட்டு 
சதிகளுக்கு   ஆளாகிக் 
கொண்டு இருப்பவர்கள்.

சாதியால்   
சண்டையிட்டு 
சங்கடங்களை  ...
விலை  பேசுகிறவர்கள் .
நாங்கள்  தமிழ் நாட்டுத் 
தமிழர்கள் .

தமிழன்  எப்போதுதான்   விழிப்பனோ?

Saturday 5 May 2012

நானும் ஒருத்தி என்பதாலா அன்பனே .....

 சாதிகளைச் சொல்லி
சலுகைக்காக
 வேட்கைகொள்ளுகிறவன்  இல்லை .

சாயம் போன
அரசியல்  பிழைப்பாளியும் இல்லை  நீ .

வீணான கருத்தியல் பேசி
மக்களை  கவிழ்ப்பவனும்  இல்லை .

அறம் சார்ந்த பொருளியல்
பேசுகிறாய்.

குமுகப்  பாமரத் தனங்களை
உடைத்தெறிய
களமாடுகிறாய்.

கட்டவிழ்த்து  விடப்பட்ட
காட்டுமிராண்டித் தனங்களை
முடமாக்க  எண்ணுகிறாய்.

யாதும் ஊரே
யாவாரும் கேளீர்  என
தமிழ்  சித்தாந்தத்தை
முன்னெடுக்கிறாய்.

இருத்தலை உடைத்தெறிகிறாய்.
புதியன  பதியமிடு கிறாய்.

கற்றதைக்  கற்பிக்கிறாய்.
புதியன  கற்றுக்கோள்ளுகிறாய் .

பறந்துப் பட்ட மக்களின்
நலனையே எல்லோரின்
பார்வைக்கும் வைக்கிறாய் .

அதில்  நானும்  ஒருத்தி
என்பதாலா     அன்பனே .